ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. ஈரானின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று மாலை முதல் ஈரானிய துறைமுகங்களுக்கு வரும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை பொருந்தும் என்றும், விதிகளை மீறும் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறிக்கும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘கடற்கொள்ளை’ என்று வர்ணித்துள்ள ஈரான், இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. “எங்களது துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடலில் உள்ள எந்தவொரு நாட்டின் துறைமுக பாதுகாப்பிற்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கடல் பகுதியில் பாதுகாப்பு என்பது ஒன்று அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் அல்லது யாருக்குமே பாதுகாப்பு இல்லாமல் போக வேண்டும்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் எந்நேரமும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 104.24 டாலராக அதிகரித்துள்ளது.

அதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலையும் 7 சதவீதம் உயர்ந்து 102.29 டாலரை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கும் என்பதால், இந்த முற்றுகை நீடித்தால் உலக நாடுகள் அனைத்திலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.