மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணரின் புதிய கட்டணச் சலுகை அறிவிப்பு, மருத்துவ உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாலிகஞ்ச் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பி.கே. ஹஸ்ரா, தனது மருத்துவமனை வாசலில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகத்துடன் கூடிய கியூ ஆர்  கோட் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.

அதில், தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டால், ஆலோசனைக் கட்டணத்தில் 500 ரூபாய் அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார். அந்தப் போஸ்டரில் பாஜக கொடி மற்றும் அக்கட்சியின் தொப்பி அணிந்தபடி டாக்டர் ஹஸ்ராவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த முயற்சியை எடுத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், ஒரு மருத்துவர் நோயாளிகளிடையே மதம் மற்றும் அரசியல் ரீதியான பாகுபாடு காட்டுவது அறமற்ற செயல் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள இந்திய மருத்துவச் சங்கம், மருத்துவர் ஹஸ்ராவின் இத்தகைய நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவர் ஒருவரின் இந்த அரசியல் கலந்த ‘ஆன்மீக ஆஃபர்’ கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.