மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை 21 மணி நேர இழுபறிக்குப் பிறகு தோல்வியில் முடிந்தது. இதனால் எந்நேரமும் ஈரான் – அமெரிக்கா இடையே நேரடி மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவியது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே புதிய சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையைத் மீண்டும் தங்களது தலைநகரான இஸ்லாமாபாத்திலேயே நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவும் மற்றொரு தேர்வுப் பட்டியலில் உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. முதல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அணுசக்தி விவகாரம்தான். ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க முன்வந்த நிலையில், அமெரிக்கா அதனை நிராகரித்து 20 ஆண்டுகள் வரை அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இந்த கால இடைவெளிதான் உடன்பாடு எட்டப்படாமல் போனதற்குக் காரணமாக அமைந்தது. இது குறித்துப் பேசிய அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இனி முடிவு எடுக்க வேண்டியது ஈரான் தான். அவர்கள் எங்களைச் சந்திக்கத் தயாராக இருந்தால் இரு நாடுகளுக்கும் இது ஒரு நல்ல ஒப்பந்தமாக அமையும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரானுக்கு அமெரிக்கா சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பது ‘பொருளாதார பயங்கரவாதம்’ என ஜே.டி.வான்ஸ் சாடியுள்ளார். வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்படுமா அல்லது போர் மேகங்கள் இன்னும் வலுவடையுமா என்பதை உலகமே உற்று நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.