உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், முதலமைச்சர் பங்கேற்கவிருந்த முக்கியப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் அதிகாரி ஒருவர் அரை நிர்வாணமாகவும், கடும் போதையிலும் சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்சில் சதர் வளாகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் தனது சீருடைச் சட்டையைக் கழற்றிவிட்டு, வெறும் பனியன் மற்றும் காக்கி கால்சட்டையுடன் தரைமண்ணில் புரண்டுள்ளார். “நான் எங்கே நிற்கிறேன்?” என்று அவர் போதை தள்ளாடக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் “நீங்கள் நிற்கவில்லை, தரையில் படுத்துக் கிடக்கிறீர்கள்” என்று கிண்டலாகப் பதிலளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காவல்துறையின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

முதலமைச்சரின் வருகையை ஒட்டி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரியே இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

முன்னதாக முசாபர்நகரில் பணியாற்றிய இவர், தற்போது புலந்தஷார் பகுதியில் பணியில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சக காவலர்கள், போதையில் குழப்பம் விளைவித்த அந்த அதிகாரியை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

விஐபி பாதுகாப்பிலேயே இத்தகைய ஒழுக்கமற்ற செயல் அரங்கேறியிருப்பது, காவல்துறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.