ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியக் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கவில்லை என ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாஹ்லி இது குறித்துக் கூறுகையில், இந்தியா ஈரானின் மிக முக்கியமான மற்றும் நம்பிக்கைக்குரிய ஐந்து நட்பு நாடுகளில் ஒன்று என்றும், இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்யத் தேவையான அனைத்து உதவிகளையும் ஈரான் தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவும் தான் எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் பெரும்பகுதி இந்தப் பாதை வழியாகவே வருவதால், ஈரானின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

அதே சமயம், இந்தப் பகுதி தற்போது ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் தான் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் ஃபதாஹ்லி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா தனது சட்டவிரோத நிபந்தனைகளைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு புறம், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தைத் முடக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்டுள்ளார்.

ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மட்டுமே தடுக்கப்படும் என்றும், பிற நாடுகளின் கப்பல்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றும் அமெரிக்கா கூறினாலும், இந்தப் போர்ச் சூழல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.