தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அரங்கேறிய கோர விபத்து காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி மற்றும் வசந்தி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தின் கோரத்தினால் காரின் முன்பகுதி லாரிக்குள் சிக்கி அப்பளம்போல நொறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த பாஸ்கரன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார், சிதைந்த காரை வெட்டி எடுத்து உடல்களை மீட்டதோடு, விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமி தரிசனம் முடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சென்னை மற்றும் தூத்துக்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.