எடப்பாடி பழனிசாமிக்கும் தமக்கும் இடையிலான மோதல் என்பது வெறும் அண்ணன்-தம்பி சண்டையைப் போன்றதுதான் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், கடந்த காலங்களில் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், தற்போது நிலவும் அரசியல் சூழலில் மக்கள் நலன் கருதியும், தி.மு.க. என்ற ‘தீயசக்தியை’ ஆட்சியில் இருந்து அகற்றவும் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஓரணியில் திரண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தினகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாக்கவே இந்த கூட்டணி உறுதியாகப் பயணிக்கிறது என்றார்.
மேலும் தாங்கள் ஒரே வாகனத்தில் இணைந்து பிரசாரம் செய்வதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சத்தின் உச்சத்தில் இருப்பதாகவும், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருவதாகவும் அவர் தனது உரையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
