நவீன காலப் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்களையும், குறிப்பாக ஒரு ஒற்றைத் தந்தையாக வேலை மற்றும் குழந்தையைச் சமநிலைப்படுத்துவதையும் ஒரு இளம் தந்தை தனது வீடியோ மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். லூயிசாஞ்சல் வெனேகாஸ் என்ற 27 வயது இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வாகனப் பதிவு தொடர்பான சேவைகளை வழங்கும் அலுவலகத்தில் பணிபுரியும் இவர், தனது மகனைத் தினமும் அலுவலகத்திற்கே அழைத்துச் செல்கிறார். காலை 9 மணிக்கு அலுவலக மீட்டிங்கில் இருக்கும்போதே, அழும் குழந்தையைச் சமாதானப்படுத்துவது முதல், குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு மீண்டும் தனது லேப்டாப்பில் வேலையைத் தொடர்வது வரை அவரது அன்றாடப் போராட்டத்தை அந்த வீடியோ தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 

“ஆரம்பத்தில் குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வருவது சவாலாக இருந்தது, ஆனால் இப்போது இதுவே எனக்குப் பழகிவிட்டது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள இவருக்கு இணையவாசிகள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவிற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

“நீங்கள் ஒரு மிகச்சிறந்த தந்தை, உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறோம்” எனப் பலரும் கமெண்ட் செய்து வருவதுடன், அலுவலகத்தில் குழந்தையை வசதியாகத் தூங்க வைப்பதற்கான ஆலோசனைகளையும் அவருக்கு வழங்கி வருகின்றனர். ஒரு தந்தையாகத் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல், உழைப்பிற்கும் பாசத்திற்கும் இடையே அவர் நடத்தும் இந்தப் போராட்டம் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.