மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பிரபல டேட்டிங் செயலி மூலம் இளம்பெண்ணுடன் பழகிய இளைஞர் ஒருவர், திட்டமிட்ட ‘ஹனி ட்ராப்’ பில்லிங் மோசடியில் சிக்கி பெரும் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘பம்பிள்’ (Bumble) எனும் டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். அந்தப் பெண் கொடுத்த அழைப்பின் பேரில், கொல்கத்தாவின் ரணிகுதி (Ranikuthi) பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட காபி கடைக்கு இருவரும் சென்றுள்ளனர். அந்த இடத்தை அந்தப் பெண்ணே மிகவும் பிடிவாதமாகத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த இருவரும், காபி மற்றும் ‘ஹுக்கா ஆர்டர் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த இளைஞருக்குத் தெரியாமல் அப்பெண் அங்கிருந்து நழுவியுள்ளார். பின்னர் அந்த இளைஞரிடம் வழங்கப்பட்ட ரசீதில் (Bill), உணவின் விலையை விட பல மடங்கு அதிகமான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் கேள்வி எழுப்ப முயன்றபோது, அங்கிருந்த உணவக ஊழியர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு மிரட்டி, உடனடியாகப் பணத்தைச் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். வேறு வழியின்றி அந்த இளைஞர் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

 

இது போன்ற மோசடிகள் தற்போது பெருநகரங்களில் ‘ஹனி ட்ராப் பில்லிங் மோசடி’ என்ற பெயரில் ஒரு கும்பலாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள், டேட்டிங் செயலிகளில் போலி கணக்குகளை உருவாக்கி இளைஞர்களைக் கவர்வது. நேரில் சந்திக்க ஒரு குறிப்பிட்ட உணவகத்திற்கு வரவழைப்பது. விலை அதிகமுள்ள பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, பில் வரும் நேரத்தில் பெண்கள் மாயமாவது. உணவக ஊழியர்கள் வாடிக்கையாளரை மிரட்டிப் பணம் பறிப்பது போன்றவைகளாகும்.

சமூகத்தில் அவமானம் ஏற்படும் என்ற பயத்தினால் இது போன்ற சம்பவங்களில் சிக்கிய பலரும் காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்குகின்றனர். இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இக்கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. ஆன்லைன் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களைச் சந்திக்கும் போது, முன்பின் தெரியாத உணவகங்களைத் தவிர்த்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாதுகாப்பான பொது இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.