பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், உறவுமுறைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், மூன்று மாத கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது விஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் படேல். இவரது மனைவி ராதா குமாரி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). தீபக் படேல் புனே நகரில் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் மற்ற உறுப்பினர்கள் கோதுமை அறுவடைக்காக வயலுக்குச் சென்றிருந்தனர். ராதா குமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவரது உறவினர் (கொழுந்தன் முறை) சாகில் படேல், வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
சாகில் படேல் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனை அவர் எதிர்த்ததால் ஆத்திரமடைந்த சாகில், கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கொலை செய்த பிறகு போலீஸாரிடமிருந்து தப்பிக்க சாகில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அவரே காவல்துறைக்குத் தொலைபேசி வாயிலாகப் பெண்ணின் இறப்பு குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது மாமனார், மாமியாரைப் பழிவாங்கவும், தான் குற்றத்திலிருந்து தப்பிக்கவும் அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் கோபால் மண்டல் தலைமையிலான போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஹாஜிபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “பெண்ணின் கழுத்தில் காயங்கள் உள்ளன. விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கும் சாகிலுக்கும் இடையே நீண்ட நேரமாக அலைபேசியில் உரையாடல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது சாகில் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் முழுமையான விவரங்கள் தெரியவரும்” என்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
