மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், கோவிலுக்குச் செல்வதாக கணவரிடம் பொய் கூறிவிட்டு, தனது சொந்த அக்கா மகனுடன் (உடன்பிறந்த அக்கா மகன்) பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஜாய் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பரே குஷ்வாகா என்பவரின் மனைவி (35), கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து புறப்படும்போது, தான்  கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய கணவர், அவரை அனுப்பி வைத்துள்ளார்.

கோவிலுக்குச் சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர், அவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். அப்போது அந்தப் பெண், தான் தனது சகோதரி வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், இன்று அங்கேயே தங்கிவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், கணவர் தானும் அங்கு வருவதாகக் கூறியவுடன், அந்தப் பெண் தனது அலைபேசியை அணைத்துவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கணவர் நடத்திய விசாரணையில், தனது மனைவி 25 வயதுடைய தனது அக்கா மகன் கமலேஷ் குஷ்வாகாவுடன் காதல் வயப்பட்டு, அவருடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தையும் அந்தப் பெண் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மாயமான பெண் மற்றும் அவரது அக்கா மகன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.