மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், சின்னர் தாலுகாவில் நிகழ்ந்த கோர விபத்தில், புதுமணத் தம்பதி உள்ளிட்ட நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஏழு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவதுபஞ்சாலே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்குப் பின் குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு பிக்கப் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஷிண்டேவாடி பகுதி அருகே நள்ளிரவு 1.30 மணியளவில், அந்த வாகனம் எதிரே வந்த டெம்போவுடன் நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் பிக்கப் வாகனம் சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட புதுமணத் தம்பதிகளான சுபம் கணேஷ் நவலே (21), ரிங்கு சுபம் நவலே (19), அவர்களது பாட்டி மீராபாய் விஸ்வநாத் காங்குர்டே (68) மற்றும் வாகன ஓட்டுநர் கிரண் ரவீந்திர மோர் (23) ஆகிய நால்வரும் தப்பிக்க முடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிப்போயிருந்தன. இதையடுத்து, பஞ்சாலே கிராம மயானத்தில் உயிரிழந்த கணவன்-மனைவி மற்றும் ஓட்டுநர் ஆகிய மூவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்துத் தகனம் செய்யப்பட்டன. பாட்டி மீராபாய்க்குத் தனியாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகப் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த சிறுவர்கள் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டெம்போ ஓட்டுநர் பிரவீன் அசோக் காலே மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.