டெல்லி வெல்கம் பகுதியில் உள்ள ஜீல் பூங்காவில் வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் முகமது ஷமிம் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜீன்ஸ் தைக்கும் தொழில் செய்து வந்த இவரும், கைது செய்யப்பட்டுள்ள வசீம் என்பவரும் சிறுவயது நண்பர்கள். விளையாடும் போதும், மற்ற நேரங்களிலும் ஷமிம் அடிக்கடி வசீமை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது அண்ணனை வைத்து உன்னை அடித்துக் கொன்றுவிடுவேன் என அடிக்கடி மிரட்டியுள்ளார்.
சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வசீமை எட்டி உதைத்த ஷமிம், அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசீம், தனது நண்பர்களான திலக் ராஜ் மற்றும் ஒரு சிறுவனுடன் சேர்ந்து ஷமிமைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஷமிமைச் சமாதானம் செய்வது போல அழைத்துச் சென்ற மூவரும், ஜீல் பூங்காவில் வைத்து அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினர். காயமடைந்த ஷமிம் வலியால் துடித்தபடி குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், “நீ சாகுற வரைக்கும் உனக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்காது” என்று கூறி, அவரைச் சாகவிடாமல் தடுத்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்தியும், பெரிய கல்லைப் போட்டுத் தலையைச் சிதைத்தும் அவரைத் துடிதுடிக்கக் கொன்றுள்ளனர்.
சனிக்கிழமை காலை பூங்காவில் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், வடக்கு கிழக்கு மாவட்ட டிசிபி ஆஷிஷ் மிஸ்ரா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னல் மற்றும் ஷமிமின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வசீம், திலக் ராஜ் மற்றும் ஒரு சிறுவனைப் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
