பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் போச்சாஹான் பகுதியில், அண்ணன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தம்பி உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் உடல்நலம் குன்றியிருந்த தாயும் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கான்பூரை சேர்ந்த புக்காரி தேவி (65) என்பவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் ராம்பாபு சஹானி (35) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. மகன்கள் இருவர் டெல்லியில் வேலை செய்து வரும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயைப் பார்ப்பதற்காக ஒரு மகன் சந்திரமணி ஊருக்கு வந்துள்ளார். மற்றொரு மகன் மனோஜ் ஏற்கனவே ஊரில் இருந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை, தாயின் உடல்நிலை குறித்து அண்ணன்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. அண்ணன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.

அண்ணன்கள் சண்டையிடுவதைப் பார்த்த ராம்பாபு சஹானி, அவர்களைத் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக பலமாகத் தள்ளப்பட்டதில் ராம்பாபு கீழே விழுந்து மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மகன் ராம்பாபுவின் உடலைப் பார்த்த தாய் புக்காரி தேவி, அந்தத் தாங்க முடியாத அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். ஒரே நேரத்தில் மகனும் தாயும் உயிரிழந்தது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், சகோதரர்களுக்கு இடையே சமாதானம் பேசி, இனிமேல் சண்டையிட மாட்டோம் என அவர்களிடம் உறுதிமொழிப் பத்திரம வாங்கினர். இதனைத் தொடர்ந்து, தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டன. மேலும் தனது வீண் சண்டையால் தாய் மற்றும் தம்பியைப் பறிகொடுத்த அண்ணன்கள் இருவரும் தீராத வேதனையில்உள்ளனர்.