பிரேசில் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் தைரியமான கடல் சாகச வீராங்கனையான தயேன் கசோயிரா, ஆழ்கடலில் டைவிங் செய்தபோது சுறா மீன் ஒன்று அவரது காலைக் கவ்வியது. எமனையே நேரில் பார்த்தது போன்ற அந்தத் தருணத்திலும் பதறாமல், காயங்களுடன் கரை திரும்பிய அவர், ஒரு உண்மையான வீராங்கனையாக மீண்டும் அதே இடத்திற்குச் சென்று சுறாக்களுடன் நீந்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். “பயம்னா என்னன்னு எனக்குத் தெரியாது” எனச் சொல்லும் வகையில் அவர் பதிவிட்டுள்ள இந்த புதிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சாதாரணமாக ஒருமுறை அடிபட்டாலே அந்தப் பக்கம் தலைவைத்து படுக்காத பலருக்கு மத்தியில், சுறா கடித்த பின்னரும் அதே சுறாக்களோடு விளையாடிய தயேனின் தைரியம் பலரையும் வியக்க வைத்துள்ளது. “அவை மனிதர்களைத் தாக்கும் குணம் கொண்டவை அல்ல, ஏதோ விளையாட்டுக்காகத்தான் என் காலை கடித்தது” என அவர் மிகச் சாதாரணமாகக் கூறியிருப்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப். இந்த வீராங்கனையின் அசாத்திய துணிச்சலைப் பார்த்த நெட்டிசன்கள், அவருக்குப் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.
