எம்ஜிஆரை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் ஒரு ‘தெய்வம்’ என்று புகழாரம் சூட்டினார். எம்ஜிஆர் திரையில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தனது உழைப்பால் கிடைத்த வருமானத்தை ஏழை எளிய மக்களுக்காக வாரி வழங்கியவர் என்றும், தான் மறைந்த பிறகும் தனது சொத்துக்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரைச் சென்றடைய வேண்டும் என்று உயில் எழுதி வைத்த உத்தமர் அவர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இத்தகைய மகத்தான தலைவரை இன்றைய சூழலில் அரசியலுக்கு வருபவர்களுடன் ஒப்பிடுவது எம்ஜிஆரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மற்ற நடிகர்கள் தேர்தல் நேரத்தை மட்டும் குறிவைத்து அரசியலுக்கு வருவதாகவும், ஆனால் அதிமுக மட்டுமே ஆண்டு முழுவதும் மக்களுடன் இருந்து அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும் மக்கள் முன் தோன்றுபவர்களுக்கும், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த எம்ஜிஆருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்று அவர் விளக்கினார். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் எப்போதும் மக்களின் பக்கம் நிற்கும் என்றும், சுயநலத்திற்காக அரசியலுக்கு வருபவர்கள் ஒருபோதும் எம்ஜிஆருக்கு நிகராக முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.