ஹைதராபாத்தில் திருமண வரனை மறுத்த இளம்பெண் ஒருவருக்கு, எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். மெட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரமணி என்ற பெண்ணுக்கும், மனோகர் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.

மனோகர் ரமணியிடம் திருமண விருப்பத்தைத் தெரிவித்தபோது, அவர் அதனை மென்மையாக மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனோகர், கடந்த மாதம் ரமணியைத் தாக்கியதுடன், அவரது உடலில் எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரமணி, தனது உடல்நிலை மற்றும் எதிர்காலத்தைக் குறித்து மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார். யாரிடமும் பேசாமல் தனிமையில் வாடிய அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ரமணியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மனோகரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உண்மையில் ரமணிக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி பாதிப்பு இருந்ததா அல்லது அவரைப் பயமுறுத்துவதற்காக அவ்வாறு செய்யப்பட்டதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயர்கல்வி பயின்று சாதனை படைப்பார் என்று நம்பிய மகள் கண்முன்னே சடலமாக கிடப்பதைக் கண்டு அவரது பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.