மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைப் பெற்ற தாயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்காவ் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முகம் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால், அந்த இளைஞரின் கையில் இருந்த இரண்டு பச்சை குத்தப்பட்ட அடையாளங்களை வைத்து போலீசார் சமூக வலைதளங்களில் தேடினர். இதில் உயிரிழந்தவர் புல்டானா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் ராஜகுரு என்பது உறுதி செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சச்சினின் தாய்க்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், அதற்கு சச்சின் தடையாக இருந்ததும் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து 25,000 ரூபாய் கொடுத்து ஒருவரிடம் மகனைக் கொல்லச் சொல்லியுள்ளார். அதன்படி, அந்த நபர் சச்சினை மது குடிக்க அழைத்துச் சென்று, அவர் போதையில் இருந்தபோது தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மகனின் கையில் இருந்த ‘அப்பா-அம்மா’ என்ற பச்சை குத்தப்பட்ட அடையாளமே கொலையாளிகளைக் காட்டிக்கொடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது. தற்போது சச்சினின் தாய் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
