இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய செய்தியாளரின் கேள்விக்கு, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கடும் அதிருப்தியுடன் பதிலளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கோலி பல மைல் கற்களைக் கடந்திருந்தாலும், பாகிஸ்தான் ரசிகர்கள் பாபரை ‘பாகிஸ்தானின் விராட் கோலி’ என்றே அழைத்து வந்தனர். எனினும், சமீபகாலமாக பாபரின் ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்காதது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிக்கு எதிரான போட்டியில் 146 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாபரின் பெஷாவர் சால்மி அணி, பாபர் 43 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தழுவியது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஒரு செய்தியாளர் பாபரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். “விராட் கோலியும் உங்களைப் போன்ற பாணியில்தான் விளையாடுகிறார். ஆனால் அவர் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கிறார். அந்தத் திறன் உங்களிடம் இல்லை என விமர்சிக்கப்படுகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.
🚨BABAR AZAM RESPONDS TO VIRAT KOHLI COMPARISON🚨
Q🎙️- People compare him with you what are your views on the comparison?
Babar 🎙️- “Let these things to yourself. End the comparison & carry on. It’s your misconception that I have not finished matches.”pic.twitter.com/0bx1D1fAXd
— Sam (@Cricsam01) April 9, 2026
இந்தக் கேள்வியால் கோபமடைந்த பாபர் அசாம், செய்தியாளருக்குக் காட்டமாகப் பதிலளித்தார். அவர் கூறியதாவது, “இந்த ஒப்பீடுகளை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். எங்களை ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். என்னால் போட்டிகளை முடிக்க முடியாது என்பது உங்களின் தவறான கருத்து. நான் பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளேன் என்றார்.
தற்போது பாகிஸ்தான் தேசிய அணியில் பாபரின் இடம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவரது இந்த எதிர்வினை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபர் அசாம் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் 4,366 ரன்களும் (சராசரி 42.38), 140 ஒருநாள் போட்டிகளில் 6,501 ரன்களும், 145 டி20 போட்டிகளில் 4,596 ரன்களும் எடுத்துள்ளார். புள்ளிவிவர ரீதியாக கோலியை விட பாபர் பின்தங்கியிருப்பதை அவரது ரசிகர்களே தற்போது ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
