கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தனது ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் லக்னோ அணியை வெற்றிபெறச் செய்த முகுல் சௌத்ரியின் சாதனைக்குப் பின்னால், அவரது தந்தையின் 20 ஆண்டுகால கண்ணீர் போராட்டமும் தியாகமும் ஒளிந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தலிப் சௌத்ரி. 2003-ல் பட்டம் பெற்ற அவருக்கு, தனக்குப் பிறக்கப்போகும் மகன் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. 2004-ல் முகுல் பிறந்தவுடன், அந்த லட்சியத்தை நோக்கி அவர் நகரத் தொடங்கினார். “சச்சின் டெண்டுல்கரையும் கபில் தேவையும் பார்த்து வளர்ந்தவன் நான். என் மகன் ஏன் சாதிக்க முடியுமா  என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்” என தலிப் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

முகுலின் கிரிக்கெட் பயிற்சிக்காக அவரது தந்தை சந்தித்த சோதனைகள் ஏராளம். கடந்த 2016-ல் முகுலை ஒரு சிறந்த கிரிக்கெட் அகாடமியில் சேர்க்கப் பணம் இல்லாததால், தனது வீட்டை 21 லட்சம் ரூபாய்க்குத் தலிப் விற்றார். ஹோட்டல் தொழில் தொடங்குவதற்காக வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியாததால், தலிப் சிறைக்குச் செல்ல நேரிட்டது. “நான் யாரையும் ஏமாற்றவில்லை, சூழ்நிலையால் தவணை கட்ட முடியவில்லை. உறவினர்கள் என்னை ‘பைத்தியக்காரன்’ என்று எள்ளி நகையாடினர். ஆனால் அந்தச் சொற்கள் என் வைராக்கியத்தை அதிகமாக்கியது” என்கிறார் அவர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில், முகுல் சௌத்ரியால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது. அப்போது கேப்டன் ரிஷப் பண்ட் களத்திற்கு வந்து அணியை வெற்றிபெறச் செய்ததுடன், முகுலிடம் பேசி அவருக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார். அன்று இரவு வீடியோ காலில் தந்தையிடம் பேசிய முகுல், ரத்த சிவப்பாக இருந்த கண்களுடன் அழுதுள்ளார். அணி என் மீது இவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளது, என்னால் வெற்றி தேடித்தர முடியவில்லையே என அவன் வருந்தினான். அடுத்த போட்டியில் உங்களைப் பெருமைப்படுத்துவேன் என்று அவன் கொடுத்த வாக்கை இப்போது காப்பாற்றிவிட்டான் என தலிப் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் சச்சின் வீடியோக்களைப் பார்த்து வளர்ந்த முகுல், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த அந்த ‘வின்னிங் சிக்ஸர்’ பார்த்த பிறகு அவரது தீவிர ரசிகனாக மாறினார். அன்று முதல் விக்கெட் கீப்பிங் கிளவுஸ் கேட்டு அடம்பிடித்த முகுல், இன்று தோனி பாணியிலேயே சிக்ஸர்களைப் பறக்கவிட்டுத் தனது தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார். தற்போது 2.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள முகுல், தனது முதல் வருமானத்தில் தந்தை வாங்கிய கடன்களை அடைப்பதே தனது முதல் வேலை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.