ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நாயகனாக இளம் வீரர் முகுல் சௌத்ரி உருவெடுத்துள்ளார்.

கடைசி 2 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இக்கட்டான சூழலில் களத்தில் இருந்த முகுல் சௌத்ரி, 19-வது ஓவரில் 16 ரன்களையும், 20-வது ஓவரில் 14 ரன்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக லக்னோ நகருக்கு சாரா டெண்டுல்கர் வந்துள்ளார். தனது சகோதரர் அர்ஜுன் இருக்கும் லக்னோ அணியை ஆதரிப்பாரா அல்லது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை ஆதரிப்பாரா? என ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சாரா டெண்டுல்கர் வெட்கத்துடன் புன்னகைத்தார். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டும், பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு அவர் நகர்ந்தார். சுப்மன் கில் மற்றும் சாரா இடையிலான நட்பு குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், சாராவின் இந்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

தற்போது புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும், குஜராத் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 7-வது இடத்திலும் உள்ளன. ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.