ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில், மாந்தீரிகம் மற்றும் செய்வினை நீக்கம் செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.1.07 கோடி வரை மோசடி செய்த பெண் சாமியார் சுமன் என்கிற ‘சக்தி தேவி’ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த தந்தையைக் குணப்படுத்தச் சென்ற அமன்தீப் சிங் என்பவரிடம், உங்கள் வீட்டில் செய்வினை இருப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார் சுமன்.
காளிக்கு பூஜை மற்றும் கோவில் கட்ட வேண்டும் எனக் கூறி, அமன்தீப்பின் நிலத்தை விற்க வைத்து சுமார் ரூ.8.3 கோடியை பறித்ததோடு, பல புனித தலங்களுக்கு அழைத்துச் சென்று ரகசிய சடங்குகள் என்ற பெயரில் ஊசி மூலம் அமன்தீப்பின் ரத்தத்தையும் எடுத்துள்ளனர்.
இந்த மோசடி வலையில் சுமனின் கணவர் பால்ராஜ் பணம் வசூலிக்கும் வேலையையும், மகன் வன்ஷ் பணத்தை நிர்வகிக்கும் வேலையையும் கச்சிதமாகச் செய்து வந்துள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி தர்ம காரியம் என்ற பெயரில் பல லட்சங்களைச் சுருட்டிய இவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது சூனியத்தின் மூலம் அழித்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
அமன்தீப் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தலைமறைவாக உள்ள சுமன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்மீக நம்பிக்கையை முதலீடாக வைத்து ஒரு குடும்பமே அரங்கேற்றியுள்ள இந்த மெகா மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
