ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ‘The 15’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் நிறுவனர் நிகில் ராணா, தனது ஊழியர் ஒருவரை வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வெறும் 2 நிமிடங்களில் வேலையை விட்டு நீக்கிய சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அன்றைய தினம் உடல்நிலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி கேட்ட ஊழியருக்கு, “இன்றுதான் உனது கடைசி நாள், உடனே வேலையை விட்டு கிளம்பு” என அதிரடியாக பதில் அளித்துள்ளார் நிகில்.

இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை அவரே லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்து, “திறமையை விட அர்ப்பணிப்புதான் முக்கியம். நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நாடகம்” எனப் பதிவிட்டது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இணையவாசிகள் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ஊழியர்களை மனிதர்களாக நடத்தத் தெரியாத நச்சுத்தன்மை வாய்ந்த கலாச்சாரம் இது” என ஒரு தரப்பினர் விளாச, “இது வெறும் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்பட்ட விளம்பரம்” என மற்றொரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

“திறமைக்கு இடமில்லை என்றால் இயந்திரங்களை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் நிலவும் பணிச்சுமை மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு குறித்த விவாதம் இந்தியா முழுவதும் தற்போது சூடுபிடித்துள்ளது.