ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய அவர், குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
வெறும் 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்து அசத்திய வைபவ், குறைந்த வயதிலேயே ஜாம்பவான்களை எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அபாரமான ஆட்டத்தைப் பார்த்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், அவரை ஒரு ‘உண்மையான சூப்பர் ஸ்டார்’ என்று பாராட்டியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும், இளம் வீரரான வைபவ் மீதுதான் அனைவரது கவனமும் இருக்கும் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த பெருமைக்குரிய ஸ்மித், வைபவ்வின் திறமையைக் கண்டு வியந்து அவரது தீவிர ரசிகராக மாறியுள்ளதாகக் கூறியிருப்பது இந்த இளம் வீரரின் எதிர்காலத்திற்குப் பெரும் அங்கீகாரமாக அமைந்துள்ளது.
