கிரீஸ் நாட்டில் 58 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டுப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தைச் சுற்றி ஏராளமான ஈக்கள் மொய்த்துள்ளன. அவர் அதை சாதாரணமாகக் கருதிப் புறக்கணித்த நிலையில், ஒரு வாரம் கழித்து அவருக்குக் கடுமையான சைனஸ் வலியும் இருமலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 15-ம் தேதி அவர் பலமாகத் தும்மியபோது, அவரது மூக்கிலிருந்து ஒரு அங்குல நீளமுள்ள உயிருள்ள புழு ஒன்று வெளியே விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.

 

அவரைப் பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், அறுவை சிகிச்சை மூலம் மூக்கிற்குள் இருந்த மேலும் 10 குட்டி ஈக்களையும் ஒரு கூட்டுப்புழுவையும் அகற்றினர். இவை செம்மறி ஆடுகளின் மூக்கில் வளரும் ஒரு வகை ஒட்டுண்ணிகள் என்பது தெரியவந்தது.

பொதுவாக மனித மூக்கில் இவை உயிர்வாழ்வது கடினம் என்றாலும், அந்தப் பெண்ணின் மூக்கு எலும்பு வளைந்து இருந்ததால் ஏற்பட்ட இடைவெளியில் இவை செழித்து வளர்ந்துள்ளன. பத்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய இந்த அரிய வகை பாதிப்பிலிருந்து, சரியான நேர சிகிச்சையால் அந்தப் பெண் தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார்.