பல தசாப்தங்களாகக் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பாகவே இருந்து வந்த நிலையில், தற்போது ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஹார்மோன் மாற்றங்கள் ஏதுமில்லாமல், தற்காலிகமாக விந்தணு உற்பத்தியைத் தடுக்கும் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை பாதிக்காது என்பதால், உடல் ரீதியான மாற்றங்களோ அல்லது பக்கவிளைவுகளோ இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முறையானது ‘மயோசிஸ்’ (Meiosis) எனப்படும் உயிரணுப் பிரிதல் நிலையைத் தற்காலிகமாகத் தடை செய்கிறது. இதன் மூலம் விந்தணுக்கள் உருவாவது தற்காலிகமாக நிறுத்தப்படும்.

சிகிச்சையை நிறுத்தியவுடன், மீண்டும் இயற்கையாகவே விந்தணு உற்பத்தி தொடங்கிவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். தற்போது எலிகள் மீது நடத்தப்பட்ட இந்த ஆய்வு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விரைவில் மனிதர்களுக்கான சோதனைகள் முடிந்து, இது பயன்பாட்டிற்கு வரும்போது குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண்களின் பங்களிப்பும், பொறுப்பும் சமமாக இருக்கும் என உலக சுகாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.