மத்திய கிழக்கில் போர் மேகங்கள் விலகும் என்று எதிர்பார்த்த வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு ஈரானை நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த 40 நாட்களில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் தங்களது எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக UAE குற்றம் சாட்டியுள்ளது.
“போரில் நாங்கள் பங்கேற்காத போதும், ஈரான் எங்களை இலக்கு வைத்தது. எனவே, ஈரான் தான் எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்று UAE வெளியுறவு அமைச்சகம் ஆவேசமாக தெரிவித்துள்ளது. மேலும், எவ்வித நிபந்தனையுமின்றி ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ திறந்து வைக்க வேண்டும் என்றும் ஈரான் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை UAE நிராகரித்துள்ளது.
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இந்த வார்த்தைப் போர், தற்போது எட்டப்பட்டுள்ள அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. நஷ்டஈடு விவகாரத்தில் UAE பிடிவாதம் காட்டுவதால், ஆத்திரமடைந்த ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பாதை மூடப்பட்டால், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அபாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிலும் ஈரானுக்கு எதிராக UAE தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
