ஆந்திர மாநிலத்தில் மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்ற தம்பதி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த வீரராஜு மற்றும் அவரது மனைவி வீர சைலஜா ஆகியோர், பத்தாம் வகுப்பு முடித்த தங்கள் மகன் யஷ்வந்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காகத் திட்டமிட்டனர்.
இதற்காக மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கம்மம் மாவட்டம் கொனிஜர்லா அருகே எதிரே வந்த லாரி இவர்கள் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியதுடன், படுகாயமடைந்த வீரராஜு மற்றும் சைலஜா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் விபத்தின்போது காரில் இருந்த மகன் யஷ்வந்த், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையிலும், “என் பெற்றோரை காப்பாற்றுங்கள்” என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. தற்போது யஷ்வந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் எதிர்காலத்திற்காகக் கனவுகளுடன் சென்ற தம்பதி, பாதியிலேயே உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
