கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஐடி ஊழியர் சரண்யா, கர்நாடகாவின் குடகு மலையில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் தற்போது ஒரு ‘சஸ்பென்ஸ்’ த்ரில்லராக மாறியுள்ளது. 12 பேர் கொண்ட குழுவுடன் சென்ற சரண்யா, வழிதவறி 4 நாட்களாக அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்டார். உணவின்றி, வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் அவர், 4 நாட்களுக்குப் பிறகு பழங்குடியின மக்களால் மீட்கப்பட்டார்.

ஆனால், மீட்கப்பட்டபோது அவர் சோர்வின்றி சிரித்த முகத்துடன் காணப்பட்டது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. மலையேற்ற வீரர்கள் கூட, “காட்டில் 4 நாட்கள் இருந்தவருக்கு உடலில் எந்த கீறலோ, சோர்வோ இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது” என சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

சரண்யாவின் இந்த ‘சர்வைவல்’ கதை பொய்யானது என்றும், இது விளம்பரத்திற்காக திட்டமிடப்பட்ட நாடகம் என்றும் பாஜகவின் கிராமப்புற பிரிவு போலீசில் அதிரடியாக புகார் அளித்துள்ளது. நக்சல் எதிர்ப்பு படையினர், ட்ரோன் கேமராக்கள் என ஒரு படையே அவரைத் தேடிய நிலையில், அவர் எப்படி பாதுகாப்பான ஒரு இடத்தைக் கண்டறிந்தார் என்பது மர்மமாகவே உள்ளது.

தடியண்டமோல் மலைப்பகுதியில் தற்போது மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், தன் மீதான விமர்சனங்களை துளியும் பொருட்படுத்தாத சரண்யா, “அடுத்த டிரெக்கிங் கோடை காலத்திற்கு பிறகு தான்” என கூலாகப் பதிலளித்துள்ளது இந்த விவகாரத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.