கணவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற கோபத்தில், அங்கன்வாடி ஆசிரியை ஒருவரை கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்காரெட்டி மாவட்டம், கங்கி மண்டலம், ராசோல் கிராமத்தில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது வசந்தகுமாரி என்பவர், ராசோல் கிராமத்தில் அங்கன்வாடி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் ராவ், கடந்த காலங்களில் ‘ஹெச்.பி.என் ஃபைனான்ஸ்’ (HBN Finance) என்ற பெயரில் கிராம மக்களிடம் பெரும் தொகையை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு கடந்த 7-ஆம் தேதி, வசந்தகுமாரி பணியில் இருந்தபோது ஒரு கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. “ஃபைனான்ஸ் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று அவர் எவ்வளவோ விளக்கியும், அவுட்டி பண்டப்பா, கோடகிரி ராமுலு உள்ளிட்ட சிலர் அதைக் கேட்கத் தயாராக இல்லை.
ஆத்திரமடைந்த அந்த கும்பல், வசந்தகுமாரியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கிராமத்தின் நடுவே உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். மேலும், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, பணத்தைத் தராவிட்டால் ஊர்வலமாக இழுத்துச் செல்வோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உயிருக்கு அஞ்சிய வசந்தகுமாரி, ஒருவேளை பைனான்ஸ் வழக்கு முடிவுக்கு வராவிட்டால், தனது நிலத்தையாவது விற்று பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தார். இதன்பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் அவரை விடுவித்தனர். கடந்த 7-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தற்போது தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்து, அங்கன்வாடி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாராயண்கேட் துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை வசந்தகுமாரி மீது தாக்குதல் நடத்தி, அவரை அவமானப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
நாகரிக சமூகத்தில் கடன் விவகாரத்திற்காக ஒரு பெண்ணை நடுரோட்டில் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
