மகாராஷ்டிராவில் பெண் தொழிலாளி ஒருவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மகனின் வாட்ஸ்அப்பிற்கே அந்த வீடியோக்கள் அனுப்பப்பட்டதால் மனமுடைந்த அந்தப் பெண், ரயில் முன் பாய்ந்து தனது உயிரை  மாய்த்துக் கொண்டுள்ளார்.

அதாவது கப்ராய் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பச்சு குஷ்வாஹா என்ற ஒப்பந்ததாரரிடம் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். அவருடன் பணியாற்றிய கல்யாண் பிரஜாபதி என்பவர், அந்தப் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையேயான நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட கல்யாண், அந்தப் பெண்ணுடனான அந்தரங்கமான தருணங்களை ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோக்களைக் காட்டி கல்யாண் மற்றும் ஒப்பந்ததாரரின் மகன்கள் இணைந்து அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தன்னிடம் பணிக்கு வருமாறு அவர்கள் அப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் வேலைக்குச் செல்ல மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கல்யாண், கடந்த மார்ச் 16-ஆம் தேதி அந்தப் பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அத்தோடு நில்லாமல், அந்த வீடியோக்களை அப்பெண்ணின் மகனுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கும் அனுப்பி வைத்துள்ளார். பெற்ற தாய் என்றும் பாராமல், மகனிடமே இத்தகைய வீடியோக்கள் பகிரப்பட்டதால் அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண், கடந்த மார்ச் 17-ஆம் தேதி அதிகாலை பாரிபுரா ரயில் நிலையத்திற்குச் சென்று, அதிவேகமாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அப்பெண்ணின் கணவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள கல்யாண் பிரஜாபதி மற்றும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.