இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன் என்பது நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் மணிக்கணக்கில் செல்போனில் மூழ்கிக்கிடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் காட்டும் அலட்சியம், அதே ஸ்மார்ட்போனை ஒரு ஆபத்தான வெடிகுண்டாக மாற்றக்கூடும் என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. இது பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் நம்மை உறைய வைக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், தற்போது பரவி வரும் வீடியோவில் சிறுமி ஒருத்திக்கு நேர்ந்த விபரீதம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது வீட்டுப் படுக்கையில் சௌகரியமாக படுத்துக்கொண்டு செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அனைத்தும் சாதாரணமாகத் தெரிந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென அந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது. இதனால் அந்தச் சிறுமி அலறியடித்துக்கொண்டு அழுகிறார். வெடிப்புச் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் பதறியடித்துக்கொண்டு அறைக்குள் ஓடி வருகிறார். அவர் அந்த செல்போனைத் தொட முயன்றபோது, அது மீண்டும் ஒருமுறை வெடிக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பலரும் “குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்” என்று பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வளவு பெரிய வெடிப்பு நிகழ்ந்தும், அந்த சிறுமிக்கோ அல்லது தாய்க்கோ எந்தவித காயமும் ஏற்படாதது இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது அல்லது இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதுமில்லை.

மேலும் “ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது அதிக சூடாக இருந்தால் அல்லது சார்ஜ் போட்டபடியே பயன்படுத்தினால் இதுபோன்ற விபத்துகள் நேர வாய்ப்புள்ளது. எனவே, எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.”