உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லியில் 13 வயது சிறுவனின் அதிரடி நடவடிக்கையால், அவனது குடும்பம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கி ரூ.6 லட்சத்தை இழப்பதிலிருந்து நூலிழையில் தப்பியது. அதாவது பரெய்லியின் பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருக்கு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வீடியோ கால் வந்துள்ளது. அதில் சீருடை அணிந்த நபர் ஒருவர் தன்னை பயங்கரவாத தடுப்புப் பிரிவுஅதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். சஞ்சய் குமாரின் மனைவி ரோஷியின் விவரங்களைக் கூறி மிரட்டிய அந்த கும்பல், அவருடைய ஆவணங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயரதிகாரிகள் பேசுவது போல நாடகமாடிய அந்த கும்பல், சஞ்சய் குமாரின் குடும்பத்தினரை சுமார் 10 மணி நேரம் வீட்டை விட்டு வெளியேற விடாமல் ‘டிஜிட்டல் சிறையில்’ வைத்திருந்தது. வீட்டின் கதவுகளைப் பூட்டச் சொல்லி மிரட்டிய அவர்கள், வங்கி விவரங்கள், பான் கார்டு உள்ளிட்ட முக்கியத் தகவல்களைப் பெற்றுள்ளனர். மேலும், போலியான பிடிவாரண்ட் ஒன்றையும் அனுப்பி அக்குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலில், சஞ்சய் குமாரின் 13 வயது மகன் தன்மய் (8-ஆம் வகுப்பு மாணவன்), செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தான் அறிந்திருந்த ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியை நினைவுகூர்ந்தான். தன்னுடைய தந்தைக்கும் தாய்க்கும் ரகசியமாக சைகை காட்டி தைரியம் ஊட்டிய தன்மய், இடையில் அழைப்புகளைத் துண்டிக்கச் செய்தும், மோசடி கும்பல் தரவிறக்கம் செய்யச் சொன்ன செயலிகளை நீக்கியும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டான். ஒருகட்டத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், அண்டை வீட்டாரிடம் விவரத்தைக் கூறி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கச் செய்தான்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பிரேம்நகர் போலீஸார் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள், அடுத்த 10 நிமிடங்களில் சஞ்சய் குமாரின் வங்கித் தணிக்கையை முடக்கினர். இதன் மூலம் அவரது கணக்கில் இருந்த ரூ.6 லட்சம் மோசடியாவதிலிருந்து பாதுகாக்கப்பட்டது. சிறுவன் தன்மயின் துணிச்சலைப் பாராட்டிய மாவட்ட எஸ்.பி., அவனது சாமர்த்தியமே பெரும் இழப்பைத் தடுத்ததாகத் தெரிவித்தார். மேலும், சிறப்பாகச் செயல்பட்ட சைபர் கிரைம் குழுவினருக்கு எஸ்.எஸ்.பி அனுராக் ஆர்யா ரூ.10,000 வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
மேலும் “சட்டத்தில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற நடைமுறையே கிடையாது. வீடியோ காலில் யாராவது மிரட்டினால் உடனே இணைப்பைத் துண்டித்துவிட்டு 1930 அல்லது 112 என்ற எண்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
