உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்ணிற்கு அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் இழைக்கப்பட்ட பெரும் மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நிஷாந்த் குமார் என்பவருடன் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடந்தது. திருமணமான முதல் நாளில் இருந்தே கணவர் உடல் ரீதியான உறவைத் தவிர்த்து வந்ததோடு, இருவருக்கும் இடையே தலையணையை வைத்துப் படுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த மருத்துவக் கோப்புகளைச் சோதித்தபோது, கணவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவர் டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 லட்சம் ரூபாய்பணம் வாங்கி வருமாறு கூறி அவரது புகுந்த வீட்டினர் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நடத்திய விசாரணையில், தனது கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு வாரணாசியில் ஒரு மனைவியும் மகளும் இருப்பதும் தெரியவந்தது. உண்மைகளை மறைத்துத் தன்னை ஏமாற்றியதோடு, வரதட்சணை கேட்டுத் துன்புறுத்திய கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் மீது அந்தப் பெண் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே கணவரின் நோய் மற்றும் முதல் திருமணம் குறித்த உண்மைகள் வெளிவந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
