மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிரூர் தாலுக்காவில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த 11 மாதக் குழந்தையைச் சொந்தத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ரவீந்திர பவார் என்ற அந்தப் பெண், தனது கணவரைப் பிரிந்து வேறொரு நல்ல கணவனைத் தேடித் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கையில் குழந்தையுடன் இருந்தால் யாரும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று கருதிய அவர், தனது மகன் யாஷை வழியிலிருந்து அகற்ற முடிவு செய்துள்ளார்.

இதற்காக அந்தத் தாய், 11 மாதக் குழந்தையின் தலையைச் சிமெண்ட் பலகையில் மோதி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் தெரியாமல் இருக்க குழந்தையின் உடலை ஒரு பையில் அடைத்து, அருகில் இருந்த வயல் கிணற்றில் வீசியுள்ளார்.

குழந்தையின் தந்தை ரவீந்திர அசோக் பவார் அளித்த புகாரின் பேரில், ரஞ்சன்காவ்ன் காவல்துறையினர் பூஜாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனையே தாய் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் கொன்றது ஒட்டுமொத்த மனிதகுலத்தையே உலுக்கியுள்ளது.