பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 350 கோடி டாலர் கடனைத் திரும்பக் கேட்டுள்ள சம்பவம் அந்நாட்டைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழங்கப்பட்ட கடனுக்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து அதனைத் திருப்பித் தருமாறு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாகித் உசேன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த நாடு உருவாவதற்கே பாகிஸ்தான் தான் காரணம் என்றும் அந்நாட்டின் ராணுவத்திற்குத் தங்கள் நாடு தான் பயிற்சி அளித்தது என்றும் அவர் மார்தட்டியுள்ளார்.

உதவி செய்த நாட்டையே அவர் ஏளனமாகப் பேசியது தற்போது சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் அவர் பேசுகையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடன் கொண்டுள்ள நெருக்கம் அந்த நாட்டை அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் கணிசமானோர் இந்தியர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் அந்த நாடு தனது பாதுகாப்பைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். ஒருபுறம் உலக நாடுகளிடம் கடன் கேட்டு கையேந்தும் பாகிஸ்தான் மறுபுறம் உதவி செய்த நாடுகளையே இவ்வாறு அவமதிப்பது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் அரசியல்வாதியின் இந்தப் பேச்சு அந்த நாட்டிற்கு மேலும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.