மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் நாட்டைச் சில மணி நேரங்களிலேயே அழித்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையை வெறும் மிரட்டலாக மட்டும் கருத முடியாது என்பதற்குச் சான்றாக அமெரிக்காவின் அணு ஆயுதப் போர் கட்டுப்பாட்டு விமானம் என அழைக்கப்படும் டூம்ஸ்டே பிளேன் நெப்ராஸ்கா விமான தளத்தில் பறக்கத் தொடங்கியுள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

அணு ஆயுதப் போர் ஏற்படும் சூழலில் கட்டளை மையமாகச் செயல்படும் இந்த விமானத்தின் நடமாட்டம் போர் மேகங்களை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் தரப்போ இத்தகைய மிரட்டல்களுக்குத் தங்கள் நாட்டுச் சிறுவர்கள் கூட அஞ்சமாட்டார்கள் என்றும் அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளது.

அமெரிக்க உளவு அமைப்புகளின் தகவலின்படி ஈரானின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா கமேனி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் அவர் ஒரு நகரத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் பதவியேற்றது முதல் பொதுவெளியில் தோன்றாதது ஈரானின் அரசியல் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் மோதலில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ளது போரைத் தீர்மானிக்கும் முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் இந்தத் தாக்குதல்களால் கடந்த 39 நாட்களாகத் தொடரும் இந்த மோதல் தற்போது உலகப் போராக மாறுமா என்ற கவலையை சர்வதேச சமூகத்தினிடையே ஏற்படுத்தியுள்ளது.