ஈரானின் மலைப்பகுதியில் சிக்கிய அமெரிக்க அதிகாரியை மீட்ட நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடினாலும், ஈரான் இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. அமெரிக்க அதிகாரியை மீட்பது என்பது ஒரு நாடகம் என்றும், உண்மையில் ஈரானின் அணுசக்தி மையத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் திருடுவதே அமெரிக்காவின் திட்டம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க விமானம் விழுந்த இடத்திற்கும், மீட்பு நடவடிக்கை நடந்த இடத்திற்கும் இடையே சுமார் 70 முதல் 150 கிலோமீட்டர் தூரம் வித்தியாசம் இருப்பதாகவும், அணுசக்தி மையம் அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தை ஒட்டியே இந்த ஆபரேஷன் நடந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சுமார் 200 கமாண்டோக்கள், டிரோன்கள் மற்றும் போர் விமானங்கள் என ஒரு பிரம்மாண்ட படையுடன் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானிய ராணுவத்தைத் திசைதிருப்பப் போலியான தகவல்களைப் பரப்பியதுடன், ரகசியமான வான்வழித் தளம் ஒன்றையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
இந்த மீட்புப் பணியின் பின்னணியில் ஈரானின் 405 கிலோ யுரேனியத்தைக் கைப்பற்றும் சதி இருக்கலாம் என ஈரான் கருதுகிறது. இதற்கிடையில், ஈரானுடனான இந்த நேரடிப் போரில் இதுவரை 29 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், அமெரிக்காவிற்கு சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
