இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியது குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய அவர், கடந்த சீசன் தனக்கு ஏமாற்றம் மற்றும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது சொந்த ஊரான சென்னையில், தான் நேசிக்கும் சிஎஸ்கே அணியிலேயே கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், ஆனால் சில சூழல்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தன்னை அணியில் தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற குழப்பத்தையும், தலைவலியையும் சிஎஸ்கே நிர்வாகத்திற்குத் தர தான் விரும்பவில்லை என்று அஷ்வின் கூறியுள்ளார்.
“நான் விலகினால், எனக்குக் கொடுக்க வேண்டிய 10 கோடி ரூபாயை வைத்து நிர்வாகம் நல்ல இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்று நினைத்தேன்.
அதனால்தான் நானே முன்வந்து ஓய்வை அறிவித்தேன்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அஷ்வினின் இந்தத் திடீர் முடிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறந்த வீரராக மட்டுமல்லாமல், அணியின் நலனுக்காகத் தனது இடத்தையே விட்டுக்கொடுத்த அஷ்வினின் இந்த ‘பெருந்தன்மை’யைக் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
