தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டாய மதமாற்றம், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நவாஸ் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் குக்கட்பள்ளி பகுதியில் தனது கடையை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக நவாஸ் அறிமுகமானதாகவும் அவர் தன்னை இந்து மதத்திற்கு மாறிய நவதுர்கா என்று பொய் கூறி நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் உணவகத்திற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்துத் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நவாஸ் அதனைப் புகைப்படம் எடுத்து மிரட்டித் தன்னைத் திருமணம் செய்து கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு தன்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தியதுடன் கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் மேலும் தனது ஆடை மற்றும் உடல் ரீதியாகத் நவாஸின் சகோதரர்கள் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நவாஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் தலைமறைவாகியுள்ள நிலையில் முதலில் காணாமல் போனதாக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தொடர் புகாரைத் தொடர்ந்து குக்கட்பள்ளி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை நடத்தி இந்த வழக்கை பேகம்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.

தற்போது நவாஸ், முன்னாவர், சோகைல், சின்னு, ஷாருக் மற்றும் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் விஷம் கொடுத்துக் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் ஐதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.