உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்தெறிந்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், சில மாதங்களிலேயே புயல் வீசத் தொடங்கியது. மனைவியின் பிடிவாதத்தால் அந்த இளைஞர் தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவனுக்குத் தெரியாமல் உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவைச் சாப்பிட்ட கணவர் மயக்கமடைந்த நிலையில், அந்தப் பெண் பிளேடை எடுத்து கணவனின் அந்தரங்க உறுப்பின் நரம்பை அறுத்துள்ளார்.
கணவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரைப் பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட கணவர் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “அவள் இரவு முழுவதும் செல்போனில் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பாள். என்னைக் கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் செல்வதற்காகவே இந்தச் செயலைச் செய்துள்ளாள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் ஆய்வாளர் சுரேஷ் சந்திர கௌதம், தலைமறைவாக உள்ள பெண்ணைத் தேடி வருவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய நீதி வழங்கப்படும் என்றும் போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.
