பிரயாக்ராஜ் அருகே உள்ள நைனி பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுவா கிராமத்தைச் சேர்ந்த ஹஜாரிலால் என்ற முதியவர் அங்குள்ள மணல் குவாரியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டாம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

மறுநாள் காலை அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சோனு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த அறுபத்தி ஆறு வயதான ராம்லால் என்பவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மனைவிக்கும் ஹஜாரிலாலுக்கும் இடையே கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்த கள்ளத்தொடர்பு காரணமாகவே இந்தக் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

நீண்ட நாட்களாக இந்த விவகாரத்தால் ஆத்திரத்தில் இருந்த ராம்லால் சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த ஹஜாரிலாலைக் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில் இத்தகைய விபரீத உறவால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளி ராம்லால் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.