உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மனித உறுப்புகளை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்யும் ஒரு பெரும் கும்பலை போலீஸார் தரைமட்டமாக்கியுள்ளனர். பீகார் முதல் மீரட் வரை நீண்டுள்ள இந்தக் கும்பலின் பின்னணியில் பிரபல மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் ஐ.எம்.ஏ (IMA) நிர்வாகி ஒருவரும் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த ஆயுஷ் என்ற மாணவர் டேராடூனில் படித்து வருகிறார். வறுமை காரணமாக பணத் தேவை இருந்த அவரிடம், இந்தக் கும்பல் ரூ. 6 லட்சம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு ரூ. 3.50 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆயுஷ் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, கான்பூரில் உள்ள அஹுஜா மருத்துவமனையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தக் கும்பலின் முக்கிய நபரான மீரட்டைச் சேர்ந்த அஃப்ஸல் என்பவர், படுக்கை முழுவதும் கட்டுக் கட்டாகப் பணத்தை அடுக்கி வைத்து ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது இந்த சட்டவிரோதத் தொழிலில் எவ்வளவு பணம் புரளுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. தற்போது அஃப்ஸல் தப்பியோடிய நிலையில், அவர் தங்கள் மருத்துவமனை மருத்துவரே இல்லை என சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து வருகிறது.

போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ள மற்றொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், பாதிக்கப்பட்ட மாணவருக்கு உண்மையான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவில்லை. ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், ஓ.டி (OT) டெக்னீஷியனும் வெள்ளை அங்கி அணிந்து கொண்டு மருத்துவர்கள் போல நடித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். டெலிகிராம் செயலி மூலம் சிறுநீரக தானம் செய்பவர்களைத் தேடிப் பிடித்து இக்கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது.

இந்த வழக்கில் அஹுஜா மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சுர்ஜித் சிங் மற்றும் அவரது மனைவி பிரீதி அஹுஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரீதி அஹுஜா, கான்பூர் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் காசியாபாத்தைச் சேர்ந்த இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மீரட்டில் உள்ள ஆல்ஃபா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுவரை எத்தனை பேரிடம் இருந்து இவ்வாறு சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து போலீஸார் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.