வேலை என்பது ஒரு நாள் முடிவுக்கு வரலாம், ஆனால் உண்மையான நட்பு ஆயுள் முழுமைக்கும் தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழக ஓட்டுநர் ஒருவரின் பிரிவு உபசார விழா இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அரசுப் பேருந்து பணிமனையில், நீண்ட காலமாகக் பணியாற்றிய ஓட்டுநர் ஒருவர் இன்று பணி ஓய்வு பெற்றார். பொதுவாக ஓய்வுபெறும் நாளில் மாலை அணிவித்து, சால்வை போர்த்தி வழியனுப்புவது வழக்கம். ஆனால், இங்கு நடந்ததோ முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி.

திரைப்படத்தில் வரும் நண்பர்களைப் போல, ஓய்வுபெற்ற ஓட்டுநரின் நெருங்கிய நண்பர் மற்றும் சக ஊழியர், அவரைத் தனது தோளில் தூக்கி வைத்துக்கொண்டார். ‘ஷோலே’ படத்தில் வரும் புகழ்பெற்ற ஒரு பாடலில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் தோளில் அமர்ந்திருப்பதைப் போலவே, அந்த முதியவர் தனது நண்பரைத் தூக்கிக்கொண்டு பணிமனை முழுவதும் உற்சாகமாக வலம் வந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by _VED_46_..!!❤️ (@__ved_46__)

கல்லூரி காலத்து நண்பர்களைப் போல துள்ளிக்குதித்த இவர்களின் நட்பு, அங்கிருந்த மற்ற ஊழியர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற அந்த ஓட்டுநர், தனது பணிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்ததோடு மட்டுமல்லாமல், எப்போதும் புன்னகை மாறாத முகத்துடனும், கனிவான பண்புடனும் அனைவரிடமும் பழகியவர் என அவரது சக ஊழியர்கள் புகழாரம் சூட்டினர். அவரது எளிமையும், அனைவரையும் நேசிக்கும் குணமுமே இந்த மறக்க முடியாத வழியனுப்பு விழாவிற்குக் காரணமாக அமைந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஆண்டுகள் கடந்தாலும் அழியாத நட்பு”இனிய ஓய்வுக்கால வாழ்த்துகள் எனப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். மேலும் பணி ஓய்வு என்பது ஒரு பயணத்தின் முடிவு மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகால நட்பின் கொண்டாட்டம் என்பதை இந்த முதியவர்களின் அன்பு உணர்த்தியுள்ளது.