ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டத்தில், காதலனின் மிரட்டலுக்கு அஞ்சி இளம் ஆசிரியை ஒருவர் தனது உள்ளங்கையில் தந்தைக்கு உருக்கமான செய்தி எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாதவி (24) என்ற இளம்பெண், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் நாகூர் பாஷா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.

காதல் விவகாரம் சென்றுகொண்டிருந்த நிலையில், நாகூர் பாஷாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது மாதவிக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவி, அவருடனான உறவைத் துண்டித்துக்கொண்டு அவரிடமிருந்து விலக ஆரம்பித்தார். தன்னை மாதவி தவிர்ப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத நாகூர் பாஷா, ஆத்திரமடைந்து மாதவியை மிரட்டத் தொடங்கியுள்ளார். இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மாதவிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.

தன்னால் தனது தந்தைக்கும் குடும்பத்திற்கும் சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய மாதவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மாதவி தனது உள்ளங்கையில், “Take Care Papa” (அப்பா, உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்) என்று பேனாவால் எழுதியுள்ளார். தந்தையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மாதவி, தனது கடைசிச் செய்தியை அவர் கையிலேயே எழுதிவிட்டுச் சென்றது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மாதவியின் தற்கொலைக்கு நாகூர் பாஷாவின் மிரட்டலே காரணம் என்று அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள நாகூர் பாஷாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ஒரு இளம் ஆசிரியையை தற்கொலைக்குத் தூண்டிய நபருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.