பீகார் மாநிலம் பாட்னாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ஒருவர், அவரது செருப்பில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, கள்ளக்காதலனுடன் மனைவியைப் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது மனைவியின் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது. மனைவியின் ரகசியத் தொடர்பை ஆதாரத்துடன் நிரூபிக்க எண்ணிய அவர், சினிமா பாணியில் ஒரு திட்டத்தைத் தீட்டினார்.

மனைவிக்குத் தெரியாமல், அவர் அடிக்கடி பயன்படுத்தும் செருப்பிற்குள் சிறிய ரக ஜிபிஎஸ் ட்ராக்கர் (GPS Tracker) கருவி ஒன்றை கணவர் ரகசியமாகப் பொருத்தினார். இதன் மூலம் மனைவி வீட்டை விட்டு வெளியே செல்லும் இடங்களை தனது செல்போன் வழியாக அவர் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று, மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரது நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலம் கவனித்த கணவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட நேரமாக லொகேஷன் மாறாமல் இருப்பதைக் கண்டார். உடனடியாக அந்த இடத்திற்குச் சென்ற கணவர், அங்கு தனது மனைவி மற்றொரு இளைஞருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அங்கேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினரால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கணவன், மனைவி மற்றும் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர். இறுதியில், இது குடும்பப் பிரச்சனை என்பதால் சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டாம் என மூன்று தரப்பினரும் எழுதிக் கொடுத்துவிட்டு சமரசமாகச் சென்றனர்.

மேலும் தொழில்நுட்பத்தை மேம்பாட்டிற்குப் பயன்படுத்தாமல், ஒருவரைக் கண்காணிக்க செருப்பில் ஜிபிஎஸ் பொருத்திய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. இது ஒருபுறம் உண்மையை வெளிக்கொண்டு வந்தாலும், தம்பதிகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்த புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.