உலகின் அதிவேக ஏவுகணையான ஜிர்கான் மற்றும் இந்தியா ரஷியா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ரஷியாவின் முன்னணி ஏவுகணை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் லியோனோவ் நேற்று தனது 74-வது வயதில் காலமானார்.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ரஷிய கூட்டு நிறுவனமான என்.பி.ஓ மஷினோஸ்ட்ரோயேனியா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் தலைமை வடிவமைப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார். ஒலியை விட ஒன்பது மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஜிர்கான் ஏவுகணையை வடிவமைத்த பெருமை இவருக்கு உண்டு.
நிலம் மற்றும் கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாளில் விண்வெளி மற்றும் ஏவுகணை அமைப்புகளின் வடிவமைப்புப் பணிகளை முன்னின்று நடத்திய லியோனோவ் ரஷியாவின் உயரிய விருதான தொழிலாளர் நாயகன் விருதினைப் பெற்றவர் ஆவார்.
இந்திய ரஷிய கூட்டு முயற்சியில் உருவான பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்திலும் பல்வேறு மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் அவர் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. இவரது மறைவு ரஷியாவிற்கு மட்டுமல்லாமல் சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
