ஈரானுடனான கடும் போர் பதற்றத்திற்கு இடையே, ஈரான் மண்ணில் விழுந்த தனது நாட்டு போர் விமான பைலட்டை, அமெரிக்கா ஒரு அதிரடி ‘சர்ச் அண்ட் ரெஸ்க்யூ’ (Search and Rescue) ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்ததோடு, இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான மீட்பு நடவடிக்கை என்றும் பாராட்டியுள்ளார்.
தென் ஈரானில் அமெரிக்காவின் F-15E ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அதில் இருந்த இருவர் பாராசூட் மூலம் குதித்தனர். ஒருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரர் ஈரானின் அடர்ந்த மலைப்பகுதிகளில் சிக்கிக் கொண்டார்.
சுமார் ஒரு நாள் முழுவதும் எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்காமல், மலை இடுக்குகளில் மறைந்து வாழ்ந்த அந்த வீரரை மீட்க சிஐஏ (CIA) அதிகாரிகள் ஒரு தந்திரமான திட்டத்தைப் போட்டனர்.
எதிரிகளின் கவனத்தைத் திசைதிருப்ப, “பைலட்டை மீட்டுவிட்டோம்” என வதந்தியைப் பரப்பிவிட்டு, நவீன தொழில்நுட்பம் மூலம் அவரது சரியான இடத்தைக் கண்டறிந்தனர்.
இறுதியில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் வான்வழித் தாக்குதல் பாதுகாப்புடன் (Fire Cover) ஈரானுக்குள் புகுந்து அந்த வீரரைப் பத்திரமாக மீட்டனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த வீரர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண குணமடைவார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் பட பாணியில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கை தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
