இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்குப் பதிலடியாக கொல்கத்தா வரை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்று அந்த நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சியால்கோட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது,
இந்தியா மீண்டும் ஏதேனும் ஒரு ‘நாடகத்தை’ அரங்கேற்ற முயன்றால், இம்முறை இறைவனின் அருளால் எங்களது பதிலடி கொல்கத்தா வரை நீளும். இந்தியாவின் எந்தவொரு அத்துமீறலுக்கும் பாகிஸ்தான் மிக விரைவாகவும், தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தியாவின் பாதுகாப்புக் காவலில் உள்ள பாகிஸ்தானியர்களை வைத்தோ அல்லது உள்ளூர் ஆட்களை வைத்தோ இந்தியா ஒரு போலித் தாக்குதலைத் திட்டமிட்டு வருவதாக கவாஜா ஆசிப் குற்றம் சாட்டினார். எனினும், தனது இந்தக் குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் கடுமையான போர் பதற்றம் நிலவியது. சமீபத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “பாகிஸ்தான் ஏதேனும் சதிச் செயல்களில் ஈடுபட்டால், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி கொடுக்கும்” என்று எச்சரித்திருந்தார்.
மேலும் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, தற்போது பாகிஸ்தான் அமைச்சர் இவ்வாறு வம்பிழுக்கும் விதமாகப் பேசியுள்ளார். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
