விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 16 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி சரியாகப் படிக்கவில்லை என்று தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ, வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை திட்டியதற்காகப் பள்ளி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
